மும்பை: உலகக்கோப்பை தொடரில் தனக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத நிலையில், சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கை வினோத் காம்ப்ளி விமர்சித்து, சச்சின் சரியாக பேட்டிங் செய்யவில்லை என கூறி இருந்தார். பின்னர் வினோத் காம்ப்ளிக்கு வாய்ப்பு கிடைத்த போது அவர் அதில் சொதப்பி இருந்தார். இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால கிரிக்கெட் பயிற்சியாளரான ரமாகந்த் அச்ரேக்கருக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரது பால்ய கால நண்பரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியை சந்தித்தார். அந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியது.

வினோத் காம்ப்ளி தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் இருக்கிறார். அவர் போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வர முயன்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், நல்ல திறமை இருந்தும் ஜாதி ரீதியாகவும், சிலரின் விருப்பு, வெறுப்புகளாலும் வினோத் காம்ப்ளி அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகிறது.
மறுபுறம் வினோத் காம்ப்ளி தனிப்பட்ட முறையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை. அதனால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற விமர்சனமும் உள்ளது. இப்படி இரு வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வினோத் காம்ப்ளி மற்றும் சச்சின் உடன் ஒரே காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அது பற்றி பேசி உள்ளார். 1992 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் வினோத் காம்ப்ளி நடந்த கொண்ட விதம் பற்றி அவர் விவரித்து இருக்கிறார்.
"வினோத் காம்ப்ளி ஒரு குறிப்பிடத்தக்க குணாதிசயத்தை உடையவர். அவர் என்னுடனும், சச்சின் உடனும் நட்புடன் இருந்தார். 1992 உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவர் வெறுப்படைந்து இருந்தார். சச்சினும், நானும் அப்போது ஓரளவு அனுபவத்தை பெற்றிருந்ததால் அனைத்து போட்டிகளிலும் விளையாடினோம்."
"ஆனால், ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் நாங்கள் சந்திக்கும் போது வினோத் காம்ப்ளி எங்களை விமர்சிப்பார். "நீங்கள் என்ன பேட்டிங் செய்தீர்கள்? இதைவிட விரைவாக ரன் சேர்த்து குவித்து இருக்கலாம்" என்பார். சச்சினையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் ஒரு போட்டியில் குறைந்த இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றோம். அன்றைய தினம் வினோத் காம்ப்ளி எங்களிடம், "மேட்ச்சில் நாம் வெற்றி பெற்றது சரிதான். ஆனால் நாம் விரைவாகவே வெற்றி பெற்று இருக்கலாம்." என்றார்."
"சச்சினிடம், "ஜான் ட்ரைகோஸ் ஒரு சாதாரண பவுலர். அவரது பந்தை மைதானத்தை விட்டு வெளியே அடித்திருக்கலாம். ஆனால், நீ சிங்கிள் ரன்களாக எடுத்துக் கொண்டு இருந்தாய்." என்றார். அதற்கு சச்சின், "நமது நோக்கம் போட்டியை வெல்வது தான்." என்றார். ஆனால், வினோத் காம்ப்ளி அதை ஒப்புக்கொள்ளவில்லை."
"சச்சினை ஒருவர் வெறுப்பில் ஆழ்த்த முடியும் என்றால் அது வினோத் காம்ப்ளி தான். அந்த உலகக் கோப்பையில் வினோத் காம்ப்ளி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்தப் போட்டியில் அவர் நிதானமாக ஆடி 41 பந்துகளில் 24 ரன்கள் தான் எடுத்தார். அந்தப் போட்டி முடிந்தவுடன் நாங்கள் அவரை அழைத்துச் சென்றோம். "எப்படி ஆடி இருக்கிறாய்? நீ வலைப் பயிற்சியில் பெரிய சிக்சர் ஆக அடித்தாய். ஆனால், போட்டியில் அதை செய்ய முடியவில்லையே" என்றோம். அவர் அதற்கு பாகிஸ்தானின் பவுலிங் சிறப்பாக இருந்தது என்று சமாளித்தார்." இவ்வாறு 1992 உலகக் கோப்பையில் சச்சின், வினோத் காம்ப்ளி இடையே நடந்த சம்பவத்தை பற்றி கூறினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.