“பேசுவதற்கே சிரமப்படுகிறார்”.. சச்சின் நண்பர் வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை.. சகோதரர் கோரிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கர்ரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி, தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், அவரால் முன்புபோல் சுலபமாகப் பேசவோ, நடமாடவோ முடியவில்லை என்று அவரது சகோதரர் வேதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வினோத் காம்ப்ளியின் இளைய சகோதரர் விரேந்திரா, அவரது உடல்நிலை குறித்த கவலையளிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "வினோத் தற்போது பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை. அதிலிருந்து மீண்டு வர அவருக்கு இன்னும் சில காலம் ஆகும்," என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், நம்பிக்கையுடன் பேசிய விரேந்திரா, "அவர் ஒரு சாம்பியன், நிச்சயம் மீண்டு வருவார். விரைவில் அவர் மீண்டும் நடக்கவும், ஓடவும் தொடங்குவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அவர் மீண்டும் மைதானத்திற்குத் திரும்புவதை நீங்கள் காண்பீர்கள்," என்று கூறினார்.
ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
தனது அண்ணன் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விரேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார். "அவர் 10 நாட்கள் மறுவாழ்வு மையத்தில் இருந்தார். மூளை ஸ்கேன் மற்றும் சிறுநீர் பரிசோதனை உட்பட முழு உடல் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முடிவுகளில் பெரிய பிரச்சினைகள் இல்லை. ஆனால், அவரால் நடக்க முடியாததால், பிசியோதெரபி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது."
"பேச்சில் இன்னும் தடுமாற்றம் இருக்கிறது, ஆனாலும் அவர் தேறி வருகிறார். அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் மக்கள், தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நிதி நெருக்கடியும், குடும்பச் சிக்கலும்
உடல்நலப் பிரச்சினைகளோடு, வினோத் காம்ப்ளி கடுமையான நிதி நெருக்கடியிலும் சிக்கியுள்ளார். முன்னதாக, கடந்த 2023-ல் அவரது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், தனது கணவரின் பரிதாப நிலையைக் கண்டு அந்த முடிவைத் திரும்பப் பெற்றதாக இந்த ஆண்டு ஜனவரியில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு, சச்சின் டெண்டுல்கருடன் ஒரு பொது நிகழ்ச்சியில் காணப்பட்டபோது, வினோத் காம்ப்ளி நடப்பதற்குச் சிரமப்படுவது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார். அதன் உதவியுடன் காம்ப்ளிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும், வினோத் காம்ப்ளி தொடர்ந்து மோசமான உடல்நிலையுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications