புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? சேவாக் மகன் ஆரியவீர் அதிரடி.. 19 பவுண்டரி, 8 சிக்சர் விளாசி அபார சதம்
விசாகப்பட்டினம்: வினூ மான்கட் கோப்பை கிரிக்கெட் தொடரில், முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்கின் மூத்த மகனான ஆரியவீர் சேவாக்கின் அதிரடி சதத்தால் சண்டிகருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்தும் 18 வயதான ஆரியவீர், 143 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 173 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் டெல்லி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இத்தொடரில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ஆரியவீர் மற்றும் அர்னவ் புக்கா இணைந்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்த நிலையில், அர்னவ் ஆட்டமிழந்தார். பின்னர் விக்கெட் கீப்பர் அபிராஜ் சிங்குடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 48 ரன்களும், சாந்தனு யாதவ் உடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 89 ரன்களும் சேர்த்தார் ஆரியவீர். 46வது ஓவரில் ஷ்ரேஷ்ட் துகால் பந்துவீச்சில் ஆரியவீர் ஆட்டமிழந்தார். சண்டிகர் தரப்பில் ரூபேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 418 ரன்களை விட்டுக்கொடுத்து, 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்தப் போட்டியில் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆரியவீர், தற்போது சண்டிகருக்கு எதிரான போட்டியில் அபாரமாக மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய யு-19 அணியின் ஒருநாள் தொடரில் அறிமுகமான அவர், 3 போட்டிகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications


