கோஹ்லி "கோல்" போடுவது யாருக்குன்னு பார்த்தீர்களா??
டெல்லி: இந்திய டெஸ்ட் கேப்டன் கேப்டன் விராத் கோஹ்லி, ஜெர்மனி அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் ஜெர்மனி அணி தனது யூரோ கோப்பை முதல் போட்டியில் உக்ரைனை சந்திக்கிறது. இப்போட்டியில் ஜெர்மனியே வெல்லும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஜெர்மனி அணி நன்றி தெரிவித்துள்ளது. ஜெர்மனி வீரர் ஒருவர், கோஹ்லிக்குப் பரிசு அனுப்பப் போவதாக உற்சாகத்துடன் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. கோஹ்லி இதில் இடம் பெறவில்லை. ஓய்வில் உள்ளார். தற்போது உலகம் முழுவதும் கால்பந்து ஜூரம் களை கட்டியுள்ளது. ஒரு பக்கம் கோபா அமெரிக்கா. இன்னொரு பக்கம் யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியுள்ளது.
இதில் யூரோ கோப்பைக் கால்பந்துத் தொடரில் இன்று முக்கியப் போட்டியாக ஜெர்மனியின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. உக்ரைனுடன் ஜெர்மனி மோதுகிறது. இந்தப் போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கோஹ்லி ஆதரவு
இந்தப் போட்டியில் ஜெர்மனிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் விராத் கோஹ்லி. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெர்மனிக்கு ஆதரவாக
கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜெர்னியுடன் நான்
இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்டில், யூரோஸ் போட்டிகளில் நான் ஜெர்மனியுடன் இருக்கிறேன். நீங்கள் யாரை சப்போர்ட் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் கோஹ்லி.

லில்லியில் முதல் போட்டி
பிரான்சில் நடந்து வரும் யூரோ கோப்பைப் போட்டியில் ஜெர்மனி - உக்ரைன் போட்டி லில்லி நகரில் உள்ள பியரி மாராய் ஸ்டேடியத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்குகிறது. இதில் ஜெர்மனியே வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நான்கு முறை உலக சாம்பியன்
ஜெர்மனி அணி நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணியாகும். நடப்பு சாம்பியனும் அதுதான். இதனால் அதன் கையே ஓங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் உக்ரைன் அணியை ஜெர்மனி எப்படி புரட்டி எடுக்கப் போகிறது என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கோஹ்லிக்கு ஜெர்மனி நன்றி
கோஹ்லி ஜெர்மனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நன்றி சொல்லியுள்ளனர். தேங்க் யூ கோஹ்லி என்று அதில் நன்றி சொல்லியுள்ளனர்.
பரிசனுக்கும் டோனி!
அதேபோல கோஹ்லிக்கு ஜெர்மனி அணியின் 26 வயதான நடுக்கள ஆட்டக்காரர் டோனி க்ரூஸும் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்டில், அழகான சட்டை, அருமையான எண் தேர்வு. விராத் கோஹ்லி, ஆசம். உங்களுக்குப் பரிசளிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் டோனி. அதற்கு கோஹ்லி, நன்றி சொல்லியுள்ளார்.

புல் பார்மில் கோஹ்லி
கோஹ்லி சமீப காலமாக நல்ல பார்மில் இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக அட்டகாசமான பார்மில் அவர் இருக்கிறார். 2016 ஐபிஎல் தொடரில் அவர் 973 ரன்களைக் குவித்து அசத்தினார் என்பது நினைவிருக்கலாம்.
பார்க்கலாம் கோஹ்லி வார்த்தை பலிக்கிறதா என்று.


Click it and Unblock the Notifications