மும்பை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தான். 1999ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் போது இந்த சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சில பவுலர்களில் முக்கியமானவர் வாசிம் அக்ரம்.
ஸ்விங் என்று சொன்னாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு வாசிம் அக்ரமின் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று பெயர் பெற்றவர். இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் பிடித்த ஒரு பேட்ஸ்மேன், ஒரு பவுலரின் பெயரை கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது வாசிம் அக்ரம் பேசுகையில், நான் 90களில் கிரிக்கெட் விளையாடியவன். ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்பட்டு வரும் அத்தனை வீரர்களுடன் விளையாடி இருக்கிறேன். இந்தியாவின் சுனில் கவாஸ்கர், நியூசிலாந்தின் மார்டின் க்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் என்று அனைவருடனும் விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த பெயர்களுக்கு எல்லாம் மேல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.
என்னை பொறுத்தவரை கிரிக்கெட் விளையாடிய வீரர்களிலேயே மிகவும் பிடித்த வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தான். அதன்பின் 90களுக்கு பின் சச்சின் டெண்டுல்கர் வந்தார். பின்னர் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா வந்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வாஹ் சகோதரர்கள் வந்தனார். தற்போதைய சூழலில் மிகவும் பிடித்த வீரர் என்றால் அது இந்திய வீரர். அவரின் ஆட்டத்தை பார்த்தாலே ஊக்கம் கிடைக்கிறது.
களத்திற்கு வெளியிலும் சரி, களத்திலும் சரி.. ஃபிட்னஸ், மனநிலை என்று விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் பவுலிங்கில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா என்னை திரும்பி பார்க்க வைத்துவிட்டார். அவர் சமகால வீரர்களில் ஜாம்பவானாக தெரிகிறார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று 3 வடிவங்களிலும் பும்ராவால் சிறப்பாக செயல்பட முடிவதால் தான் இன்னும் அதிகம் பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து டி20 உலகக்கோப்பை குறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், அமெரிக்கா அணிக்காக விளையாடிய சவுரப் நெட்ரவால்கர் நிச்சயம் திறமையானவர் தான். அவரால் இப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. ஒரு ஐடி ஊழியராக இருந்து கொண்டு அசத்தி வருகிறார். அவரால் நிச்சயம் முழு நேர கிரிக்கெட்டராக விளையாட முடியும் என்று நம்புகிறேன். அவரிடம் வேகம் குறைவாக இருந்தாலும், இரு பக்கமும் ஸ்விங் செய்ய முடிகிறது என்று பாராட்டியுள்ளார்.