டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடைசியாக ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 12 ஆண்டுகள் ஆகிறது. விராட் கோலி 2012 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக உத்திர பிரதேசத்தை எதிர்த்து விளையாடி இருக்கிறார்.
ஆனால் அதன் பிறகு விராட் கோலி இந்திய அணியின் ஸ்டார் வீரராக வளர்ந்து விட்டதால், அவர் ரஞ்சிப் போட்டி பக்கமே திரும்பவில்லை. சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் வரையில் கூட ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ரஞ்சிப் பக்கமே திரும்புவதில்லை.

இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ரஞ்சி கோப்பை போட்டி வரும் அக்டோபர் பதினோராம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி அணியில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற உத்தேசப்பட்டியலை டெல்லி கிரிக்கெட் சங்கம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதில் டெல்லியில் சேர்ந்த 84 வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதில் இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான விராட் கோலி ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர் இடம் பிடித்திருக்கிறது. எனினும் இந்தப் பட்டியலில் இவர்கள் பெயர் இருந்தாலும் கோலியும் பண்டும் இம்முறை ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை. காரணம் இந்திய கிரிக்கெட் அணி வரிசையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஐபிஎல் தொடர என வரிசையாக இந்தியாவுக்கு போட்டிகள் இருக்கிறது. இதனால் கோலி, பண்ட் ஆகியோர் தாங்களே விரும்பினால் மட்டுமே ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முடியும். ஆனால் இந்த 84 வீரர்கள் பட்டியலில் இந்திய டெஸ்ட் அனிக்காக 100 போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மா பெயர் இடம் பெறவில்லை.
35 வயதான இஷாந்த் சர்மா தற்போது இந்திய அணியில் சேர்க்கப்படுவதில்லை. அண்மையில் நடைபெற்ற டெல்லி பிரிமியர் லீக் தொடரிலும் இசாந்த் சர்மா விளையாடவில்லை. இதனால் அவர் ரஞ்சி கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் இசாந்த் சர்மா விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போன்று ஐபிஎல் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாயங் யாதவ், ஹர்ஷித் ராணா போன்றவர்களின் பெயரும் டெல்லி ரஞ்சி அணியின் உத்தேச பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது.