விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு விஜய் ஹசாரே தொடரில் சம்பளம் எவ்வளவு? அடுத்த போட்டி நேரலை இருக்கா?
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் விஜய் ஹசாரே கோப்பையில் வெள்ளிகிழமை அன்று விளையாடினர். இதில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகக் களமிறங்கி சதமடித்தார். அவர் 94 பந்துகளில் 155 ரன்கள் விளாசினார். இதில், 18 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் ஷர்துல் தாக்கூர் தலைமையிலான மும்பை அணி, 237 ரன்கள் இலக்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக எட்ட உதவினார். இதே போன்று விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். 83 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த நிலையில், ரோஹித் மற்றும் கோலி இருவரும் தங்களின் அடுத்த போட்டிகளிலும் விளையாட உள்ளனர். ரோஹித் ஷர்மா, டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் உத்தரகாண்டிற்கு எதிரான மும்பையின் இரண்டாம் குரூப் சி போட்டியில் களமிறங்குகிறார்.
மும்பையைப் போலன்றி, உத்தரகாண்ட் தங்கள் முதல் விஜய் ஹசாரே போட்டியில் ஹிமாச்சலப் பிரதேசத்திடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 260 ரன்கள் இலக்கை துரத்திய அவர்கள் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தனர். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மற்றும் ஜகதீஷா சுச்சித் ஆகியோர் உத்தரகாண்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மறுபுறம், கோலி எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால், அவர் தற்போது பெங்களூருவில் உள்ளார். டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று BCCI சிறப்பு மையம் மைதானத்தில் குஜராத்திற்கு எதிரான டெல்லியின் இரண்டாம் குரூப் D போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளது. டெல்லியை போலவே, குஜராத்தும் அலூரில் சர்வீசஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டிகள் ஏதுவும் நேரலை செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெறும் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியும், ராஜ்காட்டில் நடைபெறும் போட்டி மட்டுமே நேரலை செய்யப்படும் என தெரிகிறது. இதனிடையே, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு ஊதியமாக, விஜய் ஹசாரே தொடரில் ஒரு போட்டியில் விளையாட ரூ.60 ஆயிரம் சம்பளம் தரப்பட உள்ளது.
40 லிஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர்களுக்கு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாட 60 ஆயிரமும், 21-40 போட்டியில் விளையாடியவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 20 போட்டிகளில் விளையாடியவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications