கேண்டி: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள போகும் நிலையில் பல சாதனைகள் உடைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.எப்படி சினிமாவில் அஜித் ,விஜய் என ரசிகர்கள் பிரிந்து அடித்துக் கொள்வார்களோ அதை போல் ஒரு நிலை கிரிக்கெட்டிலும் ஏற்பட்டு விட்டது.
விராட் கோலி தான் பெரியவர் என்று அவருடைய ரசிகர்களும்,ரோகித் சர்மா தான் கெத்து என அவர்கள் ரசிகர்களும் தற்போது அடிக்கடி மோதிக் கொள்வது சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிகிறது.

இருவரும் இந்திய அணிக்காக தான் விளையாடுகிறார்கள். இதில் யார் நன்றாக விளையாடினாலும் இந்தியா தான் வெற்றி பெறும் என்பதை தற்போது உள்ள 2கே கிட்ஸ் ரசிகர்கள் மறந்து விடுகிறார்கள். இந்த நிலையில் இருவரும் ஜோடி சேர்ந்து ஒரு மகத்தான சாதனையை படைக்கப் போகிறார்கள். ஆம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின்- கங்குலி, சச்சின்-சேவாக், ரோகித் -தவான், மேத்யூ ஹைடன்- கில் கிறிஸ்ட், ஜெயவர்த்தனே- சங்ககாரா,தோனி- ரெய்னா போன்ற பல ஜோடிகள் பிரபலம்.
இவர்கள் இணைந்தால் நிச்சயம் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்ப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை பெறுவார்கள். இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு புதிய மைல் கல்லை தொட இருக்கிறார்கள். இந்த ஜோடி வெறும் இரண்டு ரன்களை சேர்த்தால் ஐந்தாயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெறும்.
இதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஜோடி ஐந்தாயிரம் ரன்கள் என்ற இலக்கை தொட்டு இருக்கிறது. இதில் இந்தியாவில் கங்குலி- சச்சின் ஜோடி மற்றும் ரோகித் சர்மா -ஷிகர் தவான் ஜோடி 5 ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறது. தற்போது விராட் கோலி ரோகித் சர்மா ஜோடியும் இந்த மைல்கல்லை தொட வாய்ப்பு இருக்கிறது.
ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலுமே கங்குலி டெண்டுல்கர் ஜோடி தான் 176 இன்னிங்ஸில் 8827 ரன்களை சேர்த்து முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த ஜோடி 26 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் 29 முறை அரை சதங்களும் அடித்திருக்கிறது. இதுவே கோலி, ரோஹித் சர்மா ஜோடியை எடுத்துக் கொண்டால் 18 முறை நூறு ரன்களையும் 15 முறை 50 ரன்கள்யும் கடந்து இருக்கிறார்கள்.