டி20ல விட்டத ஒருநாள் போட்டியில பிடிச்ச கேப்டன்... 2வது இடத்துல ஹிட்மேன்... கலக்கல்!
துபாய் : ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தை குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா பிடித்துள்ளார். பல மாதங்களாக அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத போதிலும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் டி20 வடிவத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த பட்டியலில் 3வது இடத்தில் நிலை கொண்டுள்ளார்.

தரவரிசை பட்டியல் வெளியீடு
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இறுதிப்பட்டியல் இது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

870 புள்ளிகளுடன் முதலிடம்
கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ரோகித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன்மூலம் விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

5 புள்ளிகள் இடைவெளியில் பாபர் 3வது இடம்
இதனிடையே ஏறக்குறைய ஒரு ஆண்டாக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ரோகித் சர்மா. டி20 தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பாபர் அசாம் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித்திற்கும் அசாமிற்கும் இடையில் 5 புள்ளிகளே வித்தியாசம் காணப்படுகிறது.

34வது இடத்தில் கேஎல் ராகுல்
மேலும் இந்த ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 16வது இடத்தையும் டி20 பட்டியலில் 3வது இடத்தில் உள்ள கே.எல். ராகுல் 34வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications