15,000 ரன்கள்.. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் தரமான செய்கை.. சச்சின் சாதனை முறியடிப்பு!
திருவனந்தபுரம்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்களை விளாசிய 2வது வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்களை விளாசியதன் மூலமாக விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். அதேபோல் 15 ஆயிரம் ரன்களை அதிவேகமாக விளாசிய வீரர் என்ற சச்சின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி அற்புதமான சேஸிங்கை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் செய்து வருகிறது. 296 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக சேஸிங்கை தொடங்கியது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின் விராட் கோலி களம் புகுந்தார். விராட் கோலி களமிறங்கிய போதே கேரளா ரசிகர்கள் மைதானத்தை அலறவிட்டனர். இந்தப் போட்டியில் 59 ரன்கள் எடுத்தால், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 15 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை எட்டுவார் என்ற நிலை இருந்தது. இதனால் விராட் கோலி இன்றைய ஆட்டத்திலேயே சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப தொடக்கத்திலேயே பவுண்டரியை விளாசி விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினார். இதன்பின் அபாரமாக ஒரு சிக்சரையும் விளாச, அவர் ஒரு முடிவுடன் தான் களமிறங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து விராட் கோலி தனது டிரேட் மார்க் ஷாட்களான ஆன் டிரைவ், புல் ஷாட், ஸ்ட்ரைட் டிரைவ் என்று ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் போட்டார்.
தொடர்ந்து 44 ரன்களில் இருந்த போது விராட் கோலி சிக்ஸ் அடித்து தனது 80வது அரைசதத்தை எட்டினார். இதன்பின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, 59 ரன்களை கடந்தார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 15 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் 15 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15 ஆயிரம் ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். 377 இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரம் ரன்களை எட்டி இருந்தார். அதனை விராட் கோலி 303 இன்னிங்ஸிலேயே எட்டி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்திருக்கிறார். இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
