டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பந்துவீச்சு மீது விராட் கோலி சந்தேகித்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் களத்தில் உரையாடிய பேச்சு ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களும், ரோகித் சர்மா 103 ரன்களும், விராட் கோலி 76 ரன்களும் விளாசினர். இதன் மூலம் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால் அஸ்வினின் அபார பந்துவீச்சால் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனிடையே இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி பேசிய உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அந்த உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பந்துவீசிய போது, விராட் கோலி ஜெய்ஸ்வாலிடம் சென்று, பந்துவீச்சு முறையாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டுள்ளார். இருப்பினும் பிராத்வெயிட் பந்துவீச்சு குறித்து விராட் கோலியோ அல்லது இந்திய அணி தரப்பிலோ நடுவரிடம் புகார் அளிக்கப்படவில்லை.
அதேபோல் பிராத்வெயிட் பந்துவீச்சு மீது சந்தேகம் எழுப்புவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2019ல் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பிராத்வெயிட் பந்துவீச்சு குறித்து புகாரளிக்கப்பட்டது. ஆனால் பிராத்வெயிட் பந்துவீச்சை பரிசோதனை செய்த ஐசிசி, அவரின் ஆக்ஷனில் எந்த தவறும் இல்லை என்று கூறியது. இதனால் மீண்டும் பிராத்வெயிட் பந்துவீச்சு குறித்து விராட் கோலி சந்தேகம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.