IPL 2026: பெரிய தவறு.. சச்சினுக்கும் கோலிக்கும் இதுதான் வித்தியாசம்.. வறுத்து எடுக்கும் ரசிகர்கள்
ஹைதராபாத்: கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் விராட் கோலி, மைதானத்தில் காட்டும் அதிரடி ஒருபுறம் இருந்தாலும், அவரது ஆக்ரோஷமான குணம் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்த கோலியின் செயல், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதைக் குறிப்பிட்ட ரசிகர்கள், சச்சின் டெண்டுல்கருக்கும் விராட் கோலிக்கும் இடையிலான தர வித்தியாசத்தை ஒப்பிட்டு கோலியை விமர்சித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. போட்டியின் போது பவர்-பிளே ஓவர்களில் டிராவிஸ் ஹெட் மற்றும் விராட் கோலி இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஆட்டம் முடிந்த பிறகு, இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். அப்போது மற்ற அனைத்து ஹைதராபாத் வீரர்களுக்கும் கை கொடுத்த கோலி, டிராவிஸ் ஹெட் தனது கையை நீட்டியபோது, அவரை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார்.

சமூக வலைதளங்களில் அதிருப்தி
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பரவியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஆர்வலர்கள் கோலியைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு ரசிகர், "இப்போது புரிகிறதா சச்சின் டெண்டுல்கருக்கும் விராட் கோலிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்று? சச்சின் எப்போதுமே விளையாட்டின் கண்ணியத்தை மதிப்பார். ஆனால் கோலிக்கு அது பற்றி எதுவுமே தெரியவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகரோ, "டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு வந்துள்ள ஒரு விருந்தினர். அவரை அவமதிப்பது இந்தியப் பண்பாடு அல்ல. இதேபோல ஆஸ்திரேலியாவில் கோலியை நடத்தினால் நாம் சும்மா இருப்போமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும், கோலியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். டிராவிஸ் ஹெட் தான் முதலில் வம்பிழுத்தார் என்றும், தனிப்பட்ட முறையில் ஏதேனும் பேசியிருக்கலாம் என்றும் அவர்கள் தற்காத்துப் பேசுகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2023 சீசனில் கௌதம் கம்பீருடன் கோலி மோதிய சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் கறையாகப் பார்க்கப்பட்டது. அப்போது பிசிசிஐ இருவருக்கும் பல கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தற்போது மீண்டும் ஒரு சர்வதேச வீரருடன் கோலி மோதலில் ஈடுபட்டிருப்பது, அவர் மீதான நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதைக் கடந்த நிலையிலும் மைதானத்தில் கோலி காட்டும் இந்த அதீத கோபம் இளம் வீரர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் என மூத்த வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
