பாபர் அசாமை தொடர்ந்து மற்றொரு வீரர்.. எத்தனை பேருக்கு தான் கொடுக்குறது.. இதுதான் விராட் கோலி கெத்து!
பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் நெதர்லாந்து அணியின் அனுபவ வீரர் வான் டர் மெர்வ் ஜெர்சியை பரிசாக பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 128 ரன்களும், கேஎல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தேஜா 54 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த போட்டிக்கு முன் நெதர்லாந்து அணியின் அனுபவ வீரர் வான் டர் மெர்வ்-க்கு இந்திய அணியின் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக அளித்து வாழ்த்து கூறினார். 38 வயதாகும் நெதர்லாந்து வீரர் வான் டர் மெர்வ்-க்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டியாக அமைந்தது. ஏற்கனவே இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்று கிரிக்கெட் விளையாடினார். நெதர்லாந்து அணியின் வளர்ச்சிக்கு மிகமுக்கிய பங்காற்றியவர்களில் வான் டர் மெர்வ்-ம் ஒருவர். அவருக்கு விராட் கோலி ஜெர்சியை பரிசாக அளித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியிடம் ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொண்டார்.
அவரை தொடர்ந்து நெதர்லாந்து அணியினரும் விராட் கோலியிடம் ஜெர்சியை பரிசாக பெற்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிய நிலையில், விராட் கோலி ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 9 போட்டிகளில் விளையாடி 594 ரன்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications