மும்பை : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கோல்டன் டக் ஆகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. நடப்பு தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.
எனினும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் விராட் கோலி மொத்தமாகவே 5 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிராக 1 ரன், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன் என அடித்திருந்த விராட் கோலி அமெரிக்க அணிக்கு எதிராக கோல்டன் டக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார்.

இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி முதல் முறையாக கோல்டன் டக் ஆகியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது கோலிக்கு இரண்டாவது கோல்டன் டக் ஆகும். இந்த நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி மட்டும் கோல்டன் டக் ஆகவில்லை. அவருடன் சேர்ந்து 7 இந்திய வீரர்கள் கோல்டன் டக் ஆகியிருக்கிறார்கள்.
அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். முதல் முறையாக டி20 உலக கோப்பை வரலாற்றில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் கோல்டன் டக் ஆகியிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் கோல்டன் டக்கான முதல் இந்தியர் என்ற பெயரை பெற்றார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முரளி விஜய் கோல்டன் டக் ஆனார்.
2010 ஆம் ஆண்டு அதே டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நெஹ்ரா, கோல்டன் டக் ஆனார். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா கோல்டன் டக் ஆகி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் ஆகி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜா கோல்டன் டக் ஆகி இருக்கிறார். இதேபோன்று 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பும்ராவும் கோல்டன் டக் ஆகி இருக்கிறார். தற்போது இந்த பட்டியலில் விராட் கோலி எட்டாவது வீரராக சேர்ந்து இருக்கிறார்.