மும்பை: விராட் கோலி புகழ் மற்றும் பதவி வந்தவுடன் மாறிவிட்டார், அவரும் ரோஹித் சர்மாவும் ஒன்று அல்ல ரோஹித் சர்மா எப்போதும் ஒரே மாதிரியாகவே இருப்பார் என சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். அவரது பேட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அமித் மிஸ்ரா அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி கூறுமாறு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித் மிஸ்ரா, "விராட் கோலியை ஒரு கிரிக்கெட் வீரராக நான் அதிகம் மதிக்கிறேன். ஆனால், இதற்கு முன்பு அவருடன் நான் இருந்தது போல, இப்போது இல்லை. விராட் கோலிக்கு குறைவான நண்பர்கள் மட்டுமே உள்ளனர். ஏனெனில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இயல்பு வெவ்வேறானது."

"ரோஹித் பற்றிய சிறந்த விஷயத்தை நான் சொல்கிறேன். ரோஹித் சர்மாவை நான் முதல் நாள் பார்த்தபோது அவர் எப்படி நடந்து கொண்டாரோ. இன்று நான் பார்க்கும் போதும் அவர் அதே நபராகவே நடந்து கொள்கிறார். நான் ரோஹித் சர்மாவுடன் அதிகம் பழக முடியுமா? அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் ஒருவருடன் (கோலியுடன்) அதிகம் பழக முடியுமா?."
"நான் இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடவில்லை. ஆனால், நான் இப்போது ரோஹித் சர்மாவை ஐபிஎல்-இல் பார்த்தாலும் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் அவர் என்னுடன் நகைச்சுவையாக பேசுவார். நானும் நகைச்சுவையாக பேசுவேன். அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று நான் யோசிக்க மாட்டேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வோம். அவர் இப்போது உச்சத்தில் இருக்கிறார். ஆனால், நாங்கள் இப்போதும் அதே முறையில் தான் பழகுகிறோம்."
"ஆனால், விராட் கோலி நிறைய மாறிவிட்டார். நான் அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டேன். புகழ் மற்றும் பதவி வந்தவுடன் சிலர் அனைவருமே தங்களை ஒரு காரியத்துக்காக தான் அணுகுகிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். எனக்கு 14 வயதில் இருந்து சீக்குவை (விராட் கோலியின் செல்லப் பெயர்) தெரியும். நாங்கள் ஒன்றாக சமோசா சாப்பிட்டு இருக்கிறோம். அவர் பலமுறை இரவு நேரத்தில் பிட்சா கேட்பார். ஆனால், எனக்குத் தெரிந்த சீக்குவுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது." இவ்வாறு அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்