விராட் கோலி சாதனை சதம்.. ஐதராபாத்தை வீழ்த்தி ஆர்சிபி அபாரம்.. பிளே ஆப் வாய்ப்பு பிரகாசம்
ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று, பிளே ஆப் வாய்பபை பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இதன் மூலம், சிஎஸ்கே, லக்னோ அணிகள் கடைசி ஆட்டத்தில் தோற்றால் நாக் அவுட் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டுபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி பொறுமையாக விளையாடினர். அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும், ஏய்டன் மார்க்ரம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஐதராபாத் அணி தடுமாறிய நிலையில், களத்திற்கு வந்த ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி தனி ஆளாக நின்று அணியை காப்பாற்றினார்.51 பந்துகளில் 104 ரன்களை கிளாசென் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ஹாரி புருக்ஸ் 27 ரன்கள் சேர்க்க, ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி, டுபிளசிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி ஜோடி 64 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, விராட் கோலி தனது ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார்.

எப்போதும் கோலி அரைசதம் அடித்த உடன் ஆட்டமிழக்கும் நிலையில், தொடர்ந்து இம்முறை ரன்களை சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 6வது முறையாக விராட் கோலி 500 ரன்கள் எடுத்தார். விராட் கோலியை ஆட்டமிழக்க வைக்க ஐதராபாத் வீரர்கள் தடுமாறினர். இறுதியில் கோலி 62 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில், அதிக முறை சதம் அடித்தவர்கள் பட்டியலில் கெயிலின் சாதனையை கோலி சமன் செய்தார். கேப்டன் டுபிளசிஸ் தன் பங்கிற்கு 47 பந்துகளில் 71 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவரில் 4 பந்துகள் எஞ்சிய நிலையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications