பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
கிறிஸ் கெயில் ஆறு சதம் அடித்திருக்கின்ற நிலையில் விராட் கோலி ஏழு முறை சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் சதம் அடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி இந்த இலக்கை நாங்கள் இரண்டு கைகளாகவும் வாங்கிக் கொள்வோம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழந்த பிறகு 190 ரன்கள் அடித்தால் போதும் என எண்ணினோம். ஆனால் தற்போது 200 ரன்கள் அருகே வந்து விட்டோம். இது நிச்சயமான சவாலான இலக்கு தான்.
இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கை வைத்து வெற்றி பெற முடியும் என நினைக்கிறேன். தற்போது அனைத்தும் பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் நாங்கள் வகுத்த திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும் .என்னுடைய டி20 கிரிக்கெட் சரிவை சந்திக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள் .
ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. என்னுடைய சிறந்த ஆட்டத்தை தற்போது தான் நான் விளையாடி வருகிறேன் என நினைக்கிறேன். டி 20 கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். பில்டர்கள் இல்லாத இடத்தில் பார்த்து ரன்கள் அடிக்க வேண்டும். இதுதான் என்னுடைய டி20 கிரிக்கெட் ஸ்டைல். சூழலுக்கு ஏற்றார் போல் நாம் விளையாட வேண்டும்.
இதுபோல் நெருக்கடியான கட்டத்தில் அணிக்காக ரன் சேர்த்து விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னுடைய சிறந்த கிரிக்கெட்டில் நான் இருப்பதாக உணர்கிறேன். இந்த ஆடுகளத்தில் தாக்கத்தை எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஏற்படுத்த முடியும் என நினைக்கிறேன். பவுண்டரிகளை தடுத்து இரண்டு ரன்களை ஒரு ரன்னாக குறைக்கும் வகையில் நாம் பில்டிங் செய்தால் நிச்சயமாக குஜராத் அணியின் சேசிங்கை தடுக்க முடியும்.
இதுபோன்று மழை பெய்யும் தருணத்தில் ரவி சாஸ்திரி எங்களிடம் ஒரு விஷயத்தை தான் சொல்வார். அதைத்தான் நான் கடைப்பிடிப்பேன். இது போன்ற ஆட்டத்தில் மழை பெய்யுமா பெய்யாதா என்பதை நாம் கவனிக்க கூடாது. களத்தில் நாம் எப்படி விளையாட போகிறோம் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.