நம்பர் 1.. சத்தமே இல்லாமல் கெத்து காட்டிய கோலி.. பின்னாடியே துரத்தும் ரோஹித் சர்மா!
ப்ளோரிடா : கேப்டன் விராட் கோலி சத்தமே இல்லாமல் டி20 போட்டிகளில் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் தான் கோலி அந்த சாதனையை நிகழ்த்தினார். கோலி செய்த அதே சாதனையை எட்டும் தூரத்தில் தான் இருக்கிறார் ரோஹித் சர்மா.

வெ.இண்டீஸ் சறுக்கல்
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஈரப்பதமான பிட்ச்சில் சரியாக பேட்டிங் செய்ய முடியாத நிலையில், அந்த அணி விரைவாக விக்கெட்களை இழந்தது. 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா திணறல்
அடுத்து ஆடிய இந்திய அணியும் திணறல் ஆட்டம் ஆடியது. கேப்டன் கோலி உட்பட எந்த வீரரும் பொறுப்பாக விக்கெட்டை தற்காத்துக் கொண்டு ஆடவில்லை. எனினும், இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையின் காரணமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோலி சாதனை
இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார் கோலி. தன் பேட்டிங்கில் ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார். அந்த ஃபோர் மூலம் தான் சாதனை செய்தார். அது சர்வதேச டி20 அரங்கில் அவரது 224வது ஃபோர் ஆகும். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ஃபோர் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்தார்.

யாரை முந்தினார்?
இதற்கு முன் இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் 223 ஃபோர் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அந்த சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி. இந்தப் பட்டியிலில் மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது ஷாஷாத் இடம் பெற்றுள்ளார்.

துரத்தும் ரோஹித் சர்மா
நான்காம் இடத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார். அவர் 209 ஃபோர் அடித்துள்ளார். கோலியை துரத்தி வரும் ரோஹித், இதே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் கூட அவரை முந்த வாய்ப்பு உள்ளது.

சிக்ஸர் சாதனை
அதிக ஃபோர் அடித்த சாதனை கோலியிடம் இருக்கும் நிலையில், டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையை ரோஹித் சர்மா செய்ய இன்னும் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தேவை. நிச்சயம் அடுத்த இரண்டு போட்டிகளில் இரண்டு சிக்ஸ் அடித்து ரோஹித் சர்மா அந்த சாதனையை செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications