ஜோகன்னஸ்பர்க்: விராட் கோலியும், ஏபி டிவில்லியர்ஸும் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது கிரிக்கெட் உலகம் அறிந்ததே. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய காலகட்டத்தின் சிறந்த 5 வீரர்களைத் தேர்வு செய்துள்ள டிவில்லியர்ஸ், அந்தப் பட்டியலில் தனது நண்பர் விராட் கோலியின் பெயரைச் சேர்க்காதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2018-ல் ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர் மொயீன் அலியுடனான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடிய காலகட்டத்தின் சிறந்த 5 வீரர்கள் யார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு வீரரைத் தேர்வு செய்தார்.

டிவில்லியர்ஸ் தனது பட்டியலில், தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஜாக் காலிஸ், இங்கிலாந்திலிருந்து ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், பாகிஸ்தானிலிருந்து முகமது ஆசிஃப், ஆஸ்திரேலியாவிலிருந்து ஷேன் வார்ன் மற்றும் இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைத் தேர்வு செய்தார்.
இதுகுறித்து அவர் விளக்கியபோது, "நான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஆசிஃப்தான் மிகவும் ஆபத்தானவர். ஜாக் காலிஸ் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர். ஷேன் வார்னைப் பொறுத்தவரை, அவர் பந்துவீசும் விதம், அவரது ஸ்டைல் என ஒட்டுமொத்தமாக ஒரு கலைஞர் போல இருப்பார். ஃபிளின்டாஃப் முக்கியமான தருணங்களில் அபாரமாகச் செயல்படுவார். சச்சின் பேட்டிங் செய்ய வரும்போது, மைதானமே ஸ்தம்பித்துவிடும். அந்த ரசிகர்களின் வரவேற்புக்காகவே அவரைத் தேர்வு செய்வேன்" என்று குறிப்பிட்டார்.
டிவில்லியர்ஸ் தனது பட்டியலைச் சொல்லி முடித்ததும், அங்கிருந்த இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித், "இந்தப் பட்டியலில் விராட் கோலியின் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லையே?" என்று ஞாபகப்படுத்தினார். அதைக் கேட்டு லேசாகச் சிரித்த டிவில்லியர்ஸ், "மன்னித்துவிடு விராட்!" என்று கூறிவிட்டு, "இது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது மிகவும் கடினம்" என்று சமாளித்தார்.
114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், தனது நெருங்கிய நண்பரான விராட் கோலியின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்தாரா அல்லது அந்த நேரத்தில் மறந்துவிட்டாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.