லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நாளை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலியின் கையில் தான் இருக்கிறது. விராட் கோலி ஏற்கனவே சச்சினின் சாதனைகளுக்கு ஆபத்து கொடுத்து வரும் நிலையில் தற்போது மேலும் புதிய ரெக்கார்டுகளை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் நாளை தொடங்கும் ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தால் அது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 29 வது சதமாகும். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சதத்தை விராட் கோலி சமன் செய்து விடுவார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஸ்மித் 30 சதங்களுடனும், ஜோ ரூட் 29 சதங்களுடனும் இருக்கிறார்கள். விராட் கோலி 2 இன்னிங்சிலும் சதம் அடித்தால் பிராட்மேனின் சாதனை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 24 போட்டிகளில் விளையாடி 1979 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில் நாளைய ஆட்டத்தில் விராட் கோலி 188 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிராவிட்டை கோலி முந்துவார்.

2166 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் டிராவிட்டும் 2434 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் லக்ஷ்மனும் , 3630 ரன்கள் உடன் முதலிடத்தில் சச்சின் டென்டுல்கரும் இருக்கிறார்கள்.இதேபோன்று 170 ரன்கள் விராட் கோலி நாளைய டெஸ்டில் அடித்தால் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சேவாக்கை முந்துவார். இதன் மூலம் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
