மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
12 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நொடியில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நீங்கள் யாரை கேட்டாலும் இம்முறை இந்தியா தான் உலகக் கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் முதல் கிரிக்கெட் விமர்சனம் வரை கூறினார்கள். ஆனால் இம்முறை அப்படி ஒரு நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. இதற்கு காரணம் இந்திய அணியில் இருக்கும் பல பிரச்சனைகள் தான். இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பையில் இடம்பெற்ற வீரர்களில் யார் யாரெல்லாம் தற்போது இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் ஒரு ஆச்சரியம் மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறது.
ரோகித் சர்மா,ஜடேஜா, முகமது சமி போன்ற வீரர்கள் எல்லாம் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பே தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். ஆனால் இவர்களில் யாரும் 2011 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால் விராட் கோலி மட்டும் தான் அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக கோப்பை அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் விராட் கோலி மட்டுமே தற்போதைய உலககோப்பை அணியில் தாக்குப்பிடித்து இருக்கிறார். அந்தத் தொடரில் விளையாடிய எந்த ஒரு வீரரும் தற்போது நடப்பு உலக கோப்பை தொடருக்கான அணியில் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர்.
ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும், விராட் கோலி மட்டும் தான் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அஸ்வின் தற்போது ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சேர்க்கப்படுவதில்லை. இதனால் விராட் கோலி மட்டும்தான் இன்னும் இந்திய அணிக்காக சுழன்று கொண்டு இருக்கிறார். இதனால் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வார்த்தைகளை போட்டு விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.