100 ரன்களில் வெறும் 5 பவுண்டரி.. சதத்திற்கு பின் இருந்த முக்கிய காரணம்.. மனம் திறந்த விராட் கோலி!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் எப்படி இரட்டை சதத்திற்கு அருகில் செல்ல முடிந்தது, களத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து இந்திய வீரர் விராட் கோலி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற்று வந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்து வந்த 4வது டெஸ்ட் போட்டியில் கோலியின் உதவியால் சமனில் முடிந்தது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை அடிக்க, இந்திய அணி 571 ரன்களை குவித்தது. இதன் பின்னர் 2வது இன்னிங்ஸை முழுவதுமாக கூட முடிக்க நேரம் இல்லாததால் ஆட்டம் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது.

கோலியின் பொறுப்பு
என்னதான் இந்தியாவின் வெற்றியை காண முடியவில்லை என்றாலும், விராட் கோலியின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 480 ரன்கள் என்ற ஸ்கோரை நோக்கி சென்ற இந்திய அணிக்கு சுப்மன் கில், புஜாரா ஆகியோர் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். எனவே அதனை தொடர்ந்து எடுத்து செல்லும் பொறுப்பை விராட் கோலி ஏற்றுக்கொண்டார். அதற்கேற்றார் போலவே மிக நிதானமாக ரன்களை சேர்த்தார்.

அட்டகாச சதம்
சிறப்பாக விளையாடிய கோலி சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தனது டெஸ்ட் சதத்தை அடித்துவிட்டார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கம்பேக் தந்தால் போதுமா, டெஸ்டில் வேண்டாமா? என்ற விமர்சனங்களுக்கெல்லாம் இன்று பதிலடி கொடுக்கப்பட்டது. 364 பந்துகளை சந்தித்த அவர் 186 ரன்களை மொத்தமாக விளாசினார். இதில் சதம் அடிக்கும் வரையில் வெறும் 5 பவுண்டரிகளை மட்டுமே எடுத்தார்.

விராட் கோலி விளக்கம்
இந்நிலையில் தனது செயல்பாடு குறித்து அவர் பேசியுள்ளார். அதில், ஒரு வீரராக என் மீது எனக்கு இருந்த எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டிலேயே நான் நன்கு ஆடுகிறேன் என்பதை உறுதி செய்துக்கொண்டேன். நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதன்படி தடுப்பாட்டத்தை சிறப்பாக செய்தேன். அதுவும் களத்தில் நான் எதற்காக தான் இருக்கிறேன் என்ற கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என மிக உறுதியாக இருந்தேன்.

எதற்காக நிதானம்?
நான் 60வது ரன்களை கடந்த விட்ட பின்னர் இனி பெரிய ஸ்கோருக்கு சென்றுவிட வேண்டும் என்ற மன தைரியம் கிடைத்தது. ஆனால் பின்னால் களமிறங்கக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்துள்ளார் என தெரிந்தது. எனவே அவரின் ஆட்டத்தையும் நாம் தான் பார்க்க வேண்டும் என உணர்ந்து பெரிய ஷாட்களுக்கு செல்லாமல் அதிக நேரம் எடுத்து விளையாடினேன். ஆஸ்திரேலிய அணி நன்கு சவால் கொடுத்தது. எனினும் முதல் 2 டெஸ்டில் முன்னிலை எடுத்ததால் வாய்ப்பை உருவாக்கி கொண்டுள்ளோம்.


Click it and Unblock the Notifications