
பெங்களூரு: இங்கிலாந்து தொடருக்கு முன், இங்கிலாந்தின் கவுன்டி அணியான சுர்ரேவுக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி விளையாடுகிறார்.
தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, ஜூலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப் பயணம் ஜூலை 3ல் துவங்குகிறது.
அதற்கு முன்பாக, இங்கிலாந்தின் மைதானங்களின் தன்மையை அறிந்து கொள்ளும் வகையில், கவுண்டி அணிக்காக விளையாடப் போவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியிருந்தார்.
இந்த நிலையில், சுர்ரே அணிக்காக ஜூன் மாதத்தில் அவர் விளையாடப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுர்ரே அணி அறிவித்துள்ளது.
தற்போது சத்தேஸ்வர் புஜாரா யார்க் ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சசெக்ஸ் அணிக்காகவும், வருண் ஆரோன் லாசெஸ்டர்ஷயர் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.