ராஜ்கோட்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களை விளாசியது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 353 ரன்கள் என்ற வலிமையான இலக்கை நோக்கி இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி களமிறங்கியது. ரோகித் சர்மா ஒரு பக்கம் அதிரடியாக ரன்கள் சேர்த்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் அடிக்க, வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ரோகித் சர்மா - விராட் கோலி இணை சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தது.
இவர்கள் இருவரும் இணைந்து ஒவ்வொரு ஓவருக்கு பவுண்டரியை விளாச தொடங்கினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது. இதனிடையே ரோகித் சர்மா 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு பக்கம் ஸ்டார்க், தன்வீர் சங்கா ஆகியோரின் பந்துகளில் பவுண்டரிகள், சிக்சர்கள் என்று மிரட்டினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 66வது அரைசதமாகும். அதேபோல் சதங்கள் உட்பட ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 113வது அரைசதமாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதேபோல் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 145 அரைசதங்களுடன் முதலிடத்திலும், 118 அரைசதங்களுடன் குமார் சங்கக்காரா இரண்டாமிடத்திலும், 113 சதங்களுடன் விராட் கோலி 3வது இடத்தில் உள்ளனர்.