பெங்களூரு : ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் கடுமையாக போராடி உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என செயல்படுகிறீர்கள்.
ஆனால் மற்றவர்களின் தவறுகளால் உங்களுக்கு அந்த வெற்றி கிடைக்காமல் போய்விடுகிறது. அப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும். இந்த சம்பவம் ஒருமுறை அல்ல தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆம் விராட் கோலி ஆர் சிபியின் கதை இவ்வாறு தான் சோகம் நிறைந்ததாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி ஆர் சி பி அணிக்காக விளையாடி வந்தாலும், அடுத்த இரண்டு மூன்று சீசன்களில் தான் கோலி தன்னுடைய பேட்டிங்கின் உச்சத்தை தொட்டார். தனி ஆளாக நின்று விராட் கோலி எத்தனையோ வெற்றிகளை தனது பேட்டிங் மூலம் அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் 11 பேர் கொண்டு விளையாடும் அணியில் வெறும் ஒருவர் மட்டும் சரியாக விளையாடினால் எப்படி வெற்றி கிட்டும். இப்படித்தான் விராட் கோலியின் ஆர் சி பி கதை சோகமாக சென்று கொண்டிருக்கிறது. நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 639 ரகளை விளாசி இருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் ஆறு அரை சதங்களும் அடங்கும்.
140 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. சராசரியாக டி20 போட்டியில் 53 ரன்கள் அடிப்பதெல்லாம் மிகவும் அசாத்தியமானது. நேற்றைய ஆட்டத்தில் கூட விராட் கோலி மட்டும் தான் தனி ஆளாக நின்று சதம் அடித்தார். அப்படி இருக்க ஆர்சிபி அணி தோல்வியை தழுவும்போது விராட் கோலியின் மனநிலை எப்படி இருக்கும்.நேற்று ஒரு கேட்ச் பிடிக்கும்போது லேசாக காயம் ஏற்பட்டதால் விராட் கோலி பில்டிங்கில் இருந்து விலகினார்.
ஆர் சி பி அணி தோல்வி அடையும் தருவாயில் இருக்கும் போது தன்னுடைய தொப்பியால் கண்களை விராட் கோலி மறைத்துக் கொண்டார். அதன் பிறகு ஆர் சி பி அணி தோற்றவுடன் தனது கையில் வைத்திருந்த பொருளை தூக்கி எறிந்தார். எனினும் கண்கள் சிவக்க வேதனையில் இருந்த விராட் கோலி தன்னுடைய கவலைகளை தன்னுடைய சிரிப்பில் புதைத்து எதிரணிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
குறிப்பாக சுப்மன் கில்லை கட்டி அணைத்து விராட் கோலி பாராட்டினார். இதைப் பார்த்த ரசிகர்கள் விராட் கோலியை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வருகின்றனர்.