லண்டன்: இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக, விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம்தான் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இருவரின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரலாம் என்றும், 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை அவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த அத்தனை வதந்திகளுக்கும் ஒரே ஒரு வார்த்தை கூட பேசாமல், தனது செயலால் நோஸ்கட் கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
சமீபத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் நயீம் அமினுடன் உள்ளரங்க பயிற்சி மேற்கொண்ட புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். அதில், "பயிற்சிக்கு உதவியதற்கு நன்றி சகோதரரே. உங்களைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார். கடுமையான ஐபிஎல் சீசனுக்குப் பிறகு கோலி மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை இந்தப் புகைப்படம் காட்டியது.

இதுவே பெரிய செய்தியாக இருந்த நிலையில், சில நாட்கள் கழித்து ரசிகர் பக்கம் ஒன்று, அதே புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காகத் தயாராகும் விராட் கோலி" என்று பதிவிட்டிருந்தது. அந்தப் பதிவை விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு 'லைக்' செய்திருந்ததுதான் ஹைலைட். இந்த ஒரு செயல் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் களமிறங்க தயாராகி வருவதை கோலி சூசகமாக உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, சில வட இந்திய ஊடகங்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்தான் கோலி மற்றும் ரோஹித்தின் கடைசி சர்வதேசத் தொடராக இருக்கலாம் எனச் செய்தி வெளியிட்டிருந்தன. இருவரும் தங்களது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க விரும்பினால், 2027 உலகக் கோப்பைக்கான போட்டியில் நீடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டியிருக்கும் என்றும் அந்த செய்திகள் குறிப்பிட்டன.
இந்த ஊடகச் செய்திகளால் பரபரப்பு அதிகரித்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து வாரியம் இப்போதைக்குக் கவலைப்படவில்லை என்றும், வரவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளில்தான் முழு கவனமும் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர்களின் எதிர்காலம் குறித்து ஏதேனும் திட்டங்கள் இருந்தால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு தெரிவித்ததைப் போலவே, அவர்கள் பிசிசிஐயிடம் தெரிவிப்பார்கள்," என்றார். மேலும், கோலி மற்றும் ரோஹித்துக்கு அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியில் பிரிவு உபசாரப் போட்டி நடத்த பிசிசிஐ முன்வந்ததாக வெளியான செய்திகளையும் அந்த அதிகாரி திட்டவட்டமாக மறுத்தார்.
இருவரின் எதிர்காலம் முற்றிலும் அவர்கள் கையில்தான் உள்ளது என்றும், வாரியம் வரவிருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்துவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். மொத்தத்தில், ஓய்வு குறித்த வதந்திகளுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுப்பதற்கு முன்பாகவே, ஒரு சிறிய இன்ஸ்டாகிராம் செயல்பாடு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விராட் கோலி.
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கிங் கோலியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.