டாப் 5 பட்டியலில் விராட் கோலி.. ஓரம்கட்டப்பட்ட சேவாக்.. முறியடிக்கப்பட்ட பிரம்மாண்ட சாதனை!
டோமினிக்கா: இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தீவிரமாகி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கிய பயணத்தில் உள்ளதாக ரசிகர்களிடையே கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 2ஆம் நாளின் நேநீர் இடைவேளைக்கு முன் களமிறங்கிய விராட் கோலியை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிரமாக இருந்தனர்.
அதற்காக இரு முறை ரிவ்யூ-வும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீணாக்கியது. அதேபோல் ஆடுகளம் தொய்வுடன் இருந்ததால், விராட் கோலியின் ஆட்டம் நிதானத்தின் உச்சத்தில் இருந்தது. சுமார் 80 பந்துகளுக்கு பின், 81வது பந்திலேயே முதல் பவுண்டரியை விளாசினார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 96 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
அதேபோல் நேற்றைய ஆட்டத்தின் போது 21 ரன்களை விராட் கோலி கடந்த போது இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சேவாக்கின் சாதனையை முறியடித்தார். 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள சேவாக் 8,503 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் விராட் கோலி 110 போட்டிகளில் விளையாடி 8,504 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி டாப் 5 பட்டியலுக்குள் இடம்பிடித்துள்ளார்.
வழக்கம் போல் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடன் 2ஆம் இடத்திலும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், விவிஎஸ் லக்ஷ்மண் 8,781 ரன்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளனர். இதன் மூலம் விராட் கோலி விரைவில் விவிஎஸ் லக்ஷ்மண் சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications