பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி 9 ஆண்டுகளுக்குப் பிறகு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.
இது தற்போது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக மாறிவிட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 410 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஸ்ரேயாஸ் அதிகபட்சமாக 94 பந்துகளில் 128 ரன்களும், கேஎல் ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. நெதர்லாந்து அணி வீரர்கள் 5 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தாலும், அதன் பிறகு பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினர். அப்போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் விராட் கோலிக்கு பந்து வீச்சை கொடுக்குமாறு கோரிக்கை விட்டனர்.
இது குறித்து ஏற்கனவே பேசிய டிராவிட், சூழல் ஏற்பட்டால் விராட் கோலி ஆறாவது பவுலராக பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விராட் கோலிக்கு பந்து வீசும் வாய்ப்பை ரோகித் சர்மா கொடுத்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் நெதர்லாநதின் நட்சத்திர வீரர்கள் எட்வர்ட்ஸ் 17 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதை அவரால் நம்ப முடியவில்லை. இதனை அவர் உற்சாகமாகக் கொண்டாடினார். ரசிகர்களும் இதனை எதிர்பார்க்காத்தால் அவர்களுக்கு ஒரு தீபாவளி பரிசாக இது கிடைத்தது ம். மைதானத்தில் இருந்த அனைத்து வீரர்களும் விராட் கோலியை மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்து கொண்டாடினர்.விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இது ஐந்தாவது விக்கெட் ஆகும். கோலியின் இந்த விக்கெட்டை அவருடைய மனைவியும் கைதட்டி கொண்டாடினார்.