"டீ" குடிக்குறதுக்கு முன்னாடி.. 2 விக்கெட்டை தூக்கணும்" - கர்ஜித்த கோலி.. மைக்கில் பதிவான வாய்ஸ்
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 139 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசி., அணிக்கு ஸ்லிப்பில் நின்று குடைச்சல் கொடுத்து வருகிறார் விராட் கோலி.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆறாவது நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்திய வீரர்களின் பேட்டிங் சொதப்பலால் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாப் பொசிஷனில் நியூசி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

தடுமாறும் இந்தியா
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பண்ட்
இந்நிலையில், மதிய உணவுக்கு பிறகு ஜடேஜா, பண்ட், அஷ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டார்கெட் குறைவு தான். ஆனால், இந்தியா சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், குறிப்பாக, ஸ்பின்னுக்கு பந்து ஒத்துழைத்தால், இந்திய அணி நியூசி.,யை அசைத்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

யாருக்கு கோப்பை?
இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஸ்லிப்பில் நின்று கொண்டு அவ்வப்போது சில கமெண்ட்டுகளை கட்டவிழ்த்துக் கொண்டிருந்தார். அதில், மிக ஸ்பெஷலானவை இது தான். "ஆஷ்.. டீ-க்கு முன்னாடி 2 விக்கெட் போயிருக்கணும்" என்பது தான். இதை திருப்பித் திருப்பி விராட் கோலி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கேட்கும் படி சொல்லிக் கொண்டிருந்தது தான் ஹைலைட்.


Click it and Unblock the Notifications