மும்பை : இந்திய கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் இரண்டு ஸ்டார் வீரர்கள் என்றால் அது விராட் கோலியும் ரோகித் சர்மாவும் தான்.
இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் இருவரின் பங்கும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தற்போது அணியில் மிக முக்கிய சீனியர் வீரர்களாக இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்கும் கேப்டன்சி தொடர்பாக அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வருவதுண்டு.

விராட் கோலி கேப்டனாக இருந்த போது அந்த இடத்திற்கு அவரை விட ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று கூறப்பட்டது. அதற்கு காரணம் ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா பலமுறை வென்று இருப்பதால் கேப்டன்சி திறன் ரோகித்துக்கு தான் அதிகமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதன் காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ஒரு நாள் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரை அதிரடியாக பிசிசிஐ நீக்கியது. இதனால் கடுப்பான விராட் கோலி கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்கா தொடரில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
அதன் பிறகு ரோகித் சர்மா தான் மூன்று பிரிவுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனினும் களத்தில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் நல்ல நண்பர்கள் போல் காட்டிக்கொண்டனர். ரோகித் சர்மாவுக்கு விராட் கோலி தன்னால் முடிந்த அறிவுரைகளையும் வழங்கி வந்தார். இந்த நிலையில் டெஸ்டில் மீண்டும் விராட் கோலி கேப்டன் ஆக வேண்டும் என்று குரல் எழுந்தது.
ஆனால் ரோகித் சர்மா கேப்டன் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி சென்றதால் ரோஹித் சர்மா இந்திய அணியின் மூன்று பிரிவிலும் தான் கேப்டனாக இருப்பேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது விராட் கோலிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தான் ஹைதராபாத்துக்கு முதல் டெஸ்ட் தொடங்க இரண்டு நாட்கள் முன்பு வந்த விராட் கோலி போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு அணியில் இருந்து விலகி விட்டார். இதற்கு விராட் கோலியின் தனிப்பட்ட காரணங்களால் அவர் அணியில் இருந்து விலகி இருப்பதாகவும் இது குறித்து வேறு எந்த யூகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் பி சி சி ஐ கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் தான் இல்லை என்றால் டெஸ்ட் அணி எவ்வாறு இருக்கிறது என்று பாருங்கள் என்பதை பிசிசிஐக்கு தெரியப்படுத்த தான் விராட் கோலி இவ்வாறு செய்ததாகவும் கேப்டன் பதவிக்கு திரும்ப கோலி முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஒரு சிலர் இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதாகவும் இது குறித்து ரோகித் சர்மா பலமுறை விளக்கம் அளித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். விராட் கோலி தன்னுடைய இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதால் அவரது மனைவியின் பிரசவத்திற்காக இந்த விடுமுறையை அவர் எடுத்திருப்பார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.