இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டிகளில் ஒன்று 1996 உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம். பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அந்த முக்கியமான போட்டியில் கேப்டன் வாசிம் அக்ரம் விளையாடாதது ஏன் என்பது குறித்து பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில், அந்தப் போட்டியின் போது தன் சொந்த அணி வீரர்களே தனக்கு எதிராகச் செய்த துரோகம் குறித்து வாசிம் அக்ரம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 1996 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில், காயத்தைக் காரணம் காட்டி வாசிம் அக்ரம் கடைசி நேரத்தில் விலகினார்.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான பயம் காரணமாகவே அவர் விலகினார் என்றும், வேண்டுமென்றே போட்டியைப் புறக்கணித்தார் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக இந்தப் பழி அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள வாசிம் அக்ரம், "1996 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய போட்டியில் ஸ்வீப் ஷாட் ஆடியபோது எனக்கு வயிற்றில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்தியாவுடனான போட்டி அன்று காலையில் கூட நான் 4 வலி நிவாரண ஊசிகளை போட்டுக் கொண்டேன். ஆனால் என்னால் குனிந்து பந்துவீச முடியாத அளவுக்கு வலி இருந்தது. அது குணமாக 6 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால் தான் என்னால் ஆட முடியவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
அப்போது நடந்த ஒரு மோசமான சம்பவத்தையும் அக்ரம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். "நாங்கள் தோற்ற பிறகு, அந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க என்னை பலிகடா ஆக்கினார்கள். போட்டிக்கு முந்தைய நாள் இரவு, ஒரு அறையில் 5 முதல் 6 சீனியர் வீரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் அந்த அறையைக் கடந்து சென்றபோது, அவர்கள் பேசியது என் காதுகளில் விழுந்தது.
'நம்மீது பழி வராமல் இருக்க வேண்டும் என்றால், எல்லா பழியையும் இவன் (அக்ரம்) மேல் போட்டுவிடலாம்.. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொள்ளலாம் ' என்று அவர்கள் திட்டம் போட்டார்கள். என்னுடன் விளையாடியவர்கள், துணை கேப்டன் எனப் பலரும் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். அதைக் கேட்டபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது" என்று அக்ரம் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "யாராவது இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அதுவும் இந்தியாவில் நடக்கும்போது விளையாடாமல் இருப்பார்களா? நான் பாகிஸ்தான் அணியின் கேப்டன். இது ஒன்றும் தெருவோரத்தில் ஆடும் கல்லி கிரிக்கெட் கிடையாது. கடைசி நேரத்தில் நான் ஏன் பயந்து ஓடப் போகிறேன்? என் சக வீரர்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்னைப் பயன்படுத்திக் கொண்டது தான் எனக்கு மிகுந்த வலியைத் தந்தது" என்று அக்ரம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சொந்த அணி வீரர்களே இப்படி ஒரு சதித்திட்டம் தீட்டியதை வாசிம் அக்ரம் இப்போது அம்பலப்படுத்தியிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது ஒன்றும் புதிதல்ல.