"வைபவ் சூர்யவன்ஷி போல ஒரு பேட்டரை..".. பாகிஸ்தான் சூப்பர் லீக்கை வெளுத்து வாங்கிய வாசிம் அக்ரம்
லண்டன்: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகியும், இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அளவிற்கு ஒரு சிறந்த இளம் பேட்டரைக் கூட அந்தத் தொடரால் உருவாக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும், பிஎஸ்எல் தொடரில் பல்வேறு அணிகளிலும் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட வாசிம் அக்ரம், பாகிஸ்தான் பேட்டிங்கின் தற்போதைய வீழ்ச்சி குறித்துப் பேசியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் பேட்டர்கள் ஆலி ராபின்சன் போன்ற பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் கிரீஸிலேயே கால்களைப் பதித்துத் திணறி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்துப் பேசிய வாசிம் அக்ரம், "பிஎஸ்எல் தொடர் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அந்தத் தொடரால் ஒரு தரமான பேட்ஸ்மேனை உருவாக்க முடிந்ததா? சில பந்துவீச்சாளர்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு பேட்டிங் திறமையாளரை கூட நாம் உருவாக்கவில்லை. இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போல ஒரு அசாத்திய பேட்டரை நாம் உருவாக்கும் போதுதான் நமது கிரிக்கெட் முன்னேற்றமடையும்" என்று ஆதங்கப்பட்டார்.
மேலும், தைரியமாக விளையாட வேண்டும் என்றால் பேட்டிங் திறமை மிக அவசியம் என்று கூறிய அக்ரம், பாகிஸ்தானில் அடிமட்ட கிளப் கிரிக்கெட் கட்டமைப்பை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் உண்மையான முன்னேற்றம் காண வேண்டுமானால் உள்ளூர் கிளப் கிரிக்கெட்டிற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்றும், கராச்சி மற்றும் லாகூர் போன்ற நகரங்களில் தலா 10 கோடி ரூபாயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்து திறமையான இளம் வீரர்களை கண்டறிய வேண்டும் என்றும் வாசிம் அக்ரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications


