கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு என்று இளம் வீரர் உசாமா மிர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற வேண்டுமென்றால், இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் விளையாடினால், பாகிஸ்தான் அணியின் கனவு முடிவுக்கு வரும். முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
ஒருவேளை 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும், 500 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் கோல்ஃப் விளையாட்டு, ஷாப்பிங் என்று நேரம் செலவிட்டு வருகின்றனர். இதன்பின் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள், ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலவிட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் உசாமா மிர் பேசுகையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்.
வீரர்கள் அனைவரும் தங்களின் 100 சதவிகித ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வருகிறார். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை பவுலிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த போட்டியில் கிடைத்த வெற்றியும் எங்களின் மன உறுதியை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.