ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வைத்துள்ள கோரிக்கை ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய வீரர்கள் புறப்பட்ட போது, சுமார் 5 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திலேயே காத்திருந்த இந்திய அணி வீரர்கள், இரவில் தூக்கமின்றி அதிகாலையில் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தனர். இதன் காரணமாக பயிற்சியும் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திய அணி நிர்வாகம், நேரடியாக பிசிசிஐ-க்கு கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றதோடு, இளம் வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஃபார்முக்கு வந்தனர். அதேபோல் பந்துவீச்சிலும் ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் உள்ளிட்டோரும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் விளையாடிய மைதானங்களிலேயே இதுதான் நன்றாக இருந்தது. அடுத்த முறை நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு வரும் போது, சிலவற்றில் முன்னேற்றம் செய்யலாம். பயணத்திட்டம் முதல் ஏராளமானவை சொதப்பலாக அமைந்தது. கடந்த முறையும் இதுபோன்ற ஏராளமான சிக்கல்களை சந்தித்தோம்.
இதனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து வைத்துக் கொண்டு, அடுத்த முறை தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒன்றும் ஆடம்பர வசதிகளை கேட்கவில்லை. அடிப்படை வசதிகள் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதனை கடந்து பார்த்தோமென்றால், வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடுவதால் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.