எங்களுக்கு அதிக அன்பையும், சிறந்த ஆதரவையும் கொடுத்துள்ளார்கள்.. இந்திய ரசிகர்கள் பற்றி பாபர் அசாம்!
கொல்கத்தா: இந்திய மண்ணில் எனக்கு மட்டுமல்லாமல் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் அதிக அன்பும், சிறந்த ஆதரவும் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை கனவை எட்டுவதற்கு 100 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்த சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியை கற்பனை செய்ய முடியாத வரலாற்று வெற்றியை பெற வேண்டும்.

பாகிஸ்தான் 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒருவேளை 400 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கும், 450 ரன்கள் சேர்த்தால் 162 ரன்களுக்குள்ளும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் 500 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணியை 211 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரையிறுதி வாய்ப்பு குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசுகையில், கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் சிறந்த வெற்றியை பதிவு செய்ய விரும்புகிறோம். நெட் ரன் ரேட்டை உயர்த்துவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. முதல் 10 ஓவர்களை எப்படி அணுக வேண்டும் என்ற திட்டமுள்ளது. ஒருவேளை ஃபகர் ஜமான் 20 முதல் 30 ஓவர்கள் வரை விளையாடினால், எங்களுக்கு தேவையான ரன்களை எட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, இந்தியாவில் எனக்கும் எங்கள் அணி வீரர்களுக்கும் அதிக அன்பும், நிறைய ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் எனது குறிக்கோள் சதம் அல்லது அரைசதம் விளாசுவது அல்ல. எங்களின் குறிக்கோள் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என்பதுதான். எனது ஆட்டம் அதிரடியாக அமைந்ததற்கும், நிதானமாக இருந்ததற்கும் அந்தந்த சூழல் தான் காரணம். இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ளோம். ஆடுகளங்கள், சூழல் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை.
ஆனால் பயிற்சி போட்டிகளில் விளையாடிய போதே நாங்கள் சூழலுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டோம். சிறந்த ஆட்டத்துடன் உலகக்கோப்பை தொடரை முடிக்க விரும்புகிறோம். நிச்சயம் எனது ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த ஃபினிஷிங்கை கொடுக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications