பெங்களூரு: விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோரை விடவும் இந்திய அணியின் ரோகித் சர்மா எந்த பவுலரையும் அசால்ட்டாக விளாசக் கூடிய வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 9 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நிறைவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டு அசத்தினர். அதேபோல் அரையிறுதி சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பலரும் பந்துவீசி அசத்தினர்.

அதிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பந்துவீசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சூழலுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் ரோகித் சர்மா அதிரடியாக தொடக்கம் கொடுத்து வருவது பின்னர் களமிறங்கும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ரன்கள் அழுத்தமே ஏற்படாமல் உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் ரோகித் சர்மா 9 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 503 ரன்களை விளாசி இருக்கிறார். ட்ரென்ட் போல்ட், ஷாகின் அப்ரிடி, சொரிஃபுல் உள்ளிட்ட எந்த இடதுகை பந்துவீச்சாளர்களாலும் ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். மற்ற போட்டிகள் அனைத்திலும் பவுலர்களை வெளுத்து கட்டினார் என்று சொல்லலாம்.
இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், எனக்கு தெரிந்த வரை சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை போல் வேறு எந்த பேட்ஸ்மேனும் கிடையாது. நாம் அனைவரும் விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோர் பற்றி அதிகமாக தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் ரோகித் சர்மா வேற மாதிரியாக இருக்கிறார். அவர் பேட்டிங் செய்யும் போது அனைத்து பவுலர்களையும் சாதாரணமாக எதிர்கொள்கிறார்.
பார்ப்பதற்கே பேட்டிங் எளிதாக தெரியும் அளவிற்கு விளையாடுகிறார். எந்த சூழல், யார் பந்துவீசுகிறார் என்பதையெல்லாம் ரோகித் சர்மா கண்டுகொள்வதே இல்லை. அவர் தனது ஷாட்களை அசாத்தியமாக ஆடி வருகிறார். ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது பவுலர்களும், எதிரணியினரும் முதல் பந்தில் இருந்தே டிஃபென்ஸிவ் மனநிலையில் தான் ஆடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.