907 போட்டிகளில் முதல்முறை.. இந்திய அணியை புரட்டிப்போட்டு வெஸ்ட் இண்டீஸ் படைத்த வரலாற்று சாதனை
சண்டிகர்: இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக எட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது 907 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 350-க்கும் அதிகமான ரன்களை சேஸிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
நியூ சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 351 ரன்கள் குவித்தது. பின்னர் 352 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில், கேப்டன் ஷாய் ஹோப் தொடக்கம் முதல் இறுதிவரை களத்தில் நின்று 143 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசினார். இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு டப்ளினில் அயர்லாந்து அணிக்கு எதிராக 328 ரன்களை சேஸிங் செய்ததே வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிகபட்ச சேஸிங்காக இருந்தது. தனது ஒருநாள் போட்டி வரலாற்றில் ஆடிய 907 போட்டிகளில் முதல் முறையாக 350க்கும் மேற்பட்ட இலக்கை எட்டி இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ள அந்த அணி, சர்வதேச ஒருநாள் அரங்கில் 300-க்கும் மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக எட்டுவது இது 6-வது முறையாகும்.
மறுபுறம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 350-க்கும் அதிகமான ரன்களை அடித்தும் அதைத் தக்கவைக்க முடியாமல் தோல்வியடைவது இது 3-வது முறை மட்டுமே ஆகும். இதற்கு முன்பு 2019-ல் ஆஸ்திரேலியாவும், 2025-ல் தென் ஆப்பிரிக்காவும் மட்டுமே இந்திய அணிக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்துள்ளன.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், குர்னூர் பிரார், குல்தீப் யாதவ், நமன் திர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஷாய் ஹோப், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.


Click it and Unblock the Notifications

