வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்.. உலகக்கோப்பை நாயகனுக்கு கிளைவ் லாயிட் இரங்கல்
பார்படோஸ்: கிரிக்கெட் உலகின் முதல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய நாயகர்களில் ஒருவரான பெர்னார்ட் ஜூலியன், தனது 75-வது வயதில் காலமானார். இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அவரது மறைவு, கிரிக்கெட் உலகை, குறிப்பாக 70-களின் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1973 முதல் 1977 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய பெர்னார்ட் ஜூலியன், 24 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.

1975 உலகக் கோப்பையின் சிற்பி
பெர்னார்ட் ஜூலியனின் பெயர் கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்ததற்கு முக்கியக் காரணம், 1975-ல் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி உலகக் கோப்பைதான். அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்வதற்கு, அவரது ஆல் ரவுண்டர் திறமை ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
அந்த உலகக் கோப்பையின் போது இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அவர், 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அந்த உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும், தனது பந்துவீச்சில் மிரட்டிய பெர்னார்ட் ஜூலியன், 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், பேட்டிங்கிலும் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார். 37 பந்துகளைச் சந்தித்து, 26 ரன்களை சேர்த்தார் பெர்னார்ட் ஜூலியன். 1975 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகின் முதல் கிரிக்கெட் சாம்பியனாக முடிசூடியது.
'100 சதவீத உழைப்பாளி' - கேப்டன் கிளைவ் லாயிட் புகழாரம்
பெர்னார்ட் ஜூலியனின் மறைவுக்கு, அவரது கேப்டனும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானுமான கிளைவ் லாயிட் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். "அவர் எப்போதுமே 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுப்பார். தனது கடமைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நான் அவரை முழுமையாக நம்பியிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் தனது முழு திறனை அணிக்காகக் கொடுத்தார். என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்!" என்று கிளைவ் லாயிட் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரங்கல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கிஷோர் ஷாலோ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பெர்னார்ட் ஜூலியனின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பங்களிப்பு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் குடும்பத்தால் எப்போதும் மதிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications