மறைந்தது மாபெரும் சகாப்தம்.. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் காரி சோபர்ஸ் காலமானார்!
பிரிட்ஜ்டவுன்: கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சர் காரி சோபர்ஸ் தனது 89வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சர் காரி சோபர்ஸின் மறைவுச் செய்தியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 1936ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று பார்படாஸில் பிறந்த சோபர்ஸ், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி உலகையே வியக்க வைத்தார்.

தனது 17வது வயதிலேயே வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் அறிமுகமான அவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன் 8,032 ரன்கள் குவித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 57.78 ஆகும். பந்துவீச்சில் இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஃபீல்டிங்கில் 109 கேட்ச்களையும் பிடித்து அசத்தியுள்ளார்.
1958ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சோபர்ஸ் அடித்த 365 ரன்கள் மிகப் பெரிய டெஸ்ட் சாதனையாக பார்க்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகவும் அது இருந்தது. தொடர்ந்து 1968ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி, இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக பிரிட்டன் அரசு அவருக்கு 'நைட்ஹுட்' பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும் விஸ்டன் அமைப்பின் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாபெரும் ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த காரி சோபர்ஸின் மறைவு கிரிக்கெட் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய போது இந்திய வீரர்கள் காரி சோபர்ஸ்-ஐ நேரில் சந்தித்தனர். அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சுப்மன் கில் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சோபர்ஸ் உடன் பேசினர். அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போது மலரும் நினைவுகளாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
