உலகக் கோப்பைக்கு வெஸ்ட் இன்டீஸ் தகுதி பெறுமா?
டெல்லி: 2019ல் நடக்க உள்ள 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் மார்ச் 4ல் துவங்குகிறது. இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இன்டீஸ் உள்பட, 10 அணிகளில் இருந்து, இரண்டு அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்க உள்ளது. இதில், 10 அணிகள் விளையாட உள்ளன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியுடன், கடந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில், ஐசிசி தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.
மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில், மார்ச் 4ம் தேதி துவங்குகிறது.
அதில், இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இன்டீஸ், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய ஐசிசி ஒருதினப் போட்டிக்கான அங்கீகாரம் பெற்ற அணிகள் மோத உள்ளன.
அதைத் தவிர, உலக கிரிக்கெட் லீக் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த, நெதர்லாந்து, பப்புவா நியூ குய்னா, ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகளும் விளையாட உள்ளன.
பிப்ரவரி 8-15ல் நமீபியாவில் நடக்கும் உலக கிரிக்கெட் லீக் இரண்டாவது டிவிஷனில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் தகுதிச் சுற்றில் விளையாடும். கனடா, கென்யா, நமீபியா, நேபாளம், ஓமன், யு.ஏ.இ., ஆகியவை இரண்டாவது டிவிஷனில் விளையாட உள்ளன.
இதுவரை உலகக் கோப்பையை வென்ற அணிகள்: 1975 – வெஸ்ட் இன்டீஸ், 1979 – வெஸ்ட் இன்டீஸ், 1983 – இந்தியா, 1987 – ஆஸ்திரேலியா, 1992 – பாகிஸ்தான், 1996 – இலங்கை, 1999 – ஆஸ்திரேலியா, 2003 –ஆஸ்திரேலியா, 2007 –ஆஸ்திரேலியா, 2011 –இந்தியா, 2015 –ஆஸ்திரேலியா.
Story first published: Tuesday, January 16, 2018, 13:11 [IST]
Other articles published on Jan 16, 2018


Click it and Unblock the Notifications