இந்த தடவையும் நாங்கதான்.. டி20 உலக கோப்பைக்காக வெஸ்ட் இண்டீஸுன் மெகா ப்ளான் 3 மாசத்துக்கு நோ ரெஸ்ட்!
வெஸ்ட் இண்டீஸ்: டி20 உலகக்கோப்பைக்காக அடுத்த 3 மாதங்களுக்கு மிகப்பெரும் பயிற்சி தொடர்களை ஏற்பாடு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வரவழைத்து போட்டி தொடர் நடத்தவுள்ளது. இதற்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி
முதலாவதாக வெஸ்ட் இண்டீஸுக்கு தென்னாப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு ஜூன் 10ம் தேதி தொடங்கி 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 26ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தப்படவுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது.

ஆஸ்திரேலிய தொடர்
இந்த தொடர் முடிந்துவுடனேயே ஆஸ்திரேலிய அணியை வரவேற்கிறது வெஸ்ட் இண்டீஸ். அங்கு இந்த இரு அணிகளுக்கும் இடையே ஜூலை 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதன் பிறகு ஜூலை 20வது முதல் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணி
இது முடிந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஜூலை 27ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. அதன் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் அரங்கேறவுள்ளது.

மெகா திட்டம்
டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதனை குறிவைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதுவும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என டி20ல் சக்தி வாய்ந்த அணிகளை வரவழைத்து மோதி பார்க்கவுள்ளது. டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் நடப்பு சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications