டாக்கா: 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட்டில், டாக்கா, ஷீர் பங்களா தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. 14ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இறுதி போட்டியில் இந்த அணி, இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
ஜூனியர் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில், இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது. இன்றைய, 2வது அரையிறுதியில், வங்கதேசம்-மே.இ.தீவுகள் மோதின.

டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து 226 ரன்கள் எடுத்தது. கேப்டன் மேதி ஹசன் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். மே.இ.தீவுகள் தரப்பில், கீமோ பவுல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஷமர் ஸ்பிரிங்கர் மற்றும் ஷீமர் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த மே.இ.தீவுகள் அணி, 48.4 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஷமர் ஸ்ப்ரிங்கர் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். எனவே மே.இ.தீவுகள் அணி, பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும், இறுதி போட்டியில், இந்தியாவை எதிர்கொள்கிறது.