உலக கோப்பை டி20: ஒரே நேரத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மே.இ.தீவுகள் ஆண்கள் மற்றும் மகளிர் அணி
மும்பை: உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் மேற்கு இந்திய தீவுகள் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
உலக கோப்பை இருபது ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. அதேபோல் 5-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டும் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த மகளிர் உலக கோப்பை 2-வது அரையிறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.

இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி. 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த 137 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை மேற்கு இந்திய தீவுகள் மகளிர் அணி எதிர்கொள்கிறது.
இதையடுத்து அதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் ஆண்கள் அணி பலப்பரீட்சை நடத்திய அரையிறுதிப் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி அதிகபட்சமாக 89 ரன்கள் விளாசினார்.
இந்தியாவின் ஆட்டத்தை தொடர்ந்து 193 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 83 ரன்கள் குவித்தார். அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் வரும் 3ம் தேதி இங்கிலாந்துடன் இறுதி போட்டியில் மோத உள்ளன.
இதையடுத்து உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டில், ஒரே நேரத்தில் மேற்கு இந்திய தீவுகள் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்ப மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியும், மகளிர் அணியும் ஆயத்தமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications