ஒரே வருடத்தில் 3 உலக கோப்பைகளை வென்று வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை !
கொல்கத்தா: ஒரே வருடத்தில் ஜூனியர் உலக கோப்பை, மகளிர் டி20 உலக கோப்பை மற்றும் ஆண்கள் டி20 உலக கோப்பை என 3 உலக கோப்பைகளை வென்று மேற்கு இந்திய தீவுகள் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்த வருடம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கான வருடம் என்று சொல்லும் அளவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சாதனை மேல் சாதனையை குவித்து வருகின்றனர்.

முன்னதாக 11-வது ஜூனியர் உலக கோப்பை என வர்ணிக்கப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் திருவிழா வங்கதேசத்தில் ஜனவரி 22-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பிப்ரவரி 14- ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி கோப்பை வென்றது.
அதே போல் நேற்று கொல்கத்தாவில் நடந்த மகளிர் உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணியும். ஆஸ்திரேலிய அணியும் மேதின. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் முதல் முறையாக தட்டிச் சென்றது மேற்கு இந்திய தீவுகள் மகளிர் அணி.
இந்நிலையில் இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் அணி நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் நடந்தது. டாசில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் டேரன் சம்மி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் 19.4 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒரே வருடத்தில் நடந்த 3 உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது மேற்கு இந்திய தீவுகள் அணி. எந்த ஒரு நாட்டின் இளையோர், மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் 3 உலகக் கோப்பைகளை ஒரே வருடத்தில் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications