பாதி பேட்டிங்கில் வெளியேறிய கே எல் ராகுல்.. 2ஆம் நாள் ஆடுவாரா? பேட்டிங் பயிற்சியாளர் கோடக் விளக்கம்
காலே: இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மூத்த வீரர் கே எல் ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். கை விரல்களில் ஏற்பட்ட கடுமையான வலியால் அவர் வெளியேறியது இந்திய ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பும்ரா, சாய் சுதர்சன் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ராகுல் முதல் நாள் ஆட்டத்திலேயே காயம் அடைந்து இருக்கிறார். அவரால் இந்தப் போட்டியில் தொடர்ந்து ஆட முடியுமா? என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் விளக்கம் அளித்துள்ளார்.
காலே சர்வதேச மைதானத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ராகுல் நிதானமாக விளையாடி நல்ல துவக்கம் அளித்தார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்து வலுவான முன்னிலையில் இருந்தது. அப்போது ராகுல் 162 பந்துகளில் 77 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளை முடிந்து களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே, தனது இரு கைகளிலும் கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் வலி இருப்பதாக அம்பயர்களிடம் ராகுல் சைகை காட்டினார். உடனடியாக களத்திற்கு வந்த இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் விரல்களை சரிவர அசைக்க முடியாமல் ராகுல் தவித்ததால், அவர் ஆட்டத்தை தொடர முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

இதனை அடுத்து 4வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். ஆனால் கில் 28 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தால், ராகுல் இந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி தனது 77 ரன்களில் இருந்தே பேட்டிங்கை தொடர விதிமுறைகளில் இடமுள்ளது.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் கே எல் ராகுல் நிலை குறித்து விளக்கம் அளித்த பேட்டிங் பயிற்சியாளர் கோடக் அவரது காயம் பெரியது அல்ல என்றும் அவர் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் பேட்டிங் செய்வார் என்றும் கூறினார்.
முன்னதாக, ஜெய்ஸ்வால் ரன் அவுட்டான பிறகு, ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. இடையே இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யாவின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு ராகுல் அசத்தினார்.


Click it and Unblock the Notifications
