IND vs NZ: இந்தியா vs நியூசிலாந்து.. டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்? ரோகித் சர்மா முடிவு என்ன?
மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 5 போட்டிகளில் வென்றும், 4 போட்டிகளில் தோல்வியடைந்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியை இந்திய அணி ஒரேயொரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டு அரையிறுதியை போல் டாப் ஆர்டர் சரியாமல் விளையாட வேண்டும் என்ற ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் மும்பை வான்கடே பிட்ச் வழக்கம் போல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பிட்சில் கறுப்பு மண் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், ”ஸ்லோ பிட்ச்” என்பது உறுதியாகியுள்ளது.
இப்படி அமைக்கப்பட்டால் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு கூடுதல் சாதகம் இருக்கும். ஏனென்றால் இரண்டாவது பேட்டிங்கின் போது முதல் 15 ஓவர்களில் பந்து அதிக ஸ்விங்காகும். அந்த நேரத்தில் இரு அணிகளின் பவுலர்களும் அபாயகரமானவர்களாக இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட ஓவர்களை கடந்துவிட்டால், எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் நிச்சயம் எட்டக் கூடிய வகையில் இருக்கும். ஆனால் முதலில் பவுலிங் செய்யும் போது பிட்சில் எந்த உதவியும் கிடைக்காது.
இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை கேன் வில்லியம்சன் டாஸ் வென்றால் உடனடியாக பேட்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணிக்கு சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஒருவேளை கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தால், சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமமாகும். இதனால் அரையிறுதி போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications