அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல் வாய்ப்பு ஓகே.. 1009 ரன்கள் அடித்த பிரணவ் எங்கே?
மும்பை: சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், பள்ளி கிரிக்கெட் போட்டியில் 1009 ரன்கள் குவித்த பிரணவ் தனவாடே ஏன் இடம் பெறவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம், வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், 814 இந்திய மற்றும் 283 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் என மொத்தமாக 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்தில் முதன்முறையாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பெயரும் இடம் பெறுகிறது. அவரது அடிப்படை விலைத் தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் பிரணவ் தனவாடே குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறிய பிளாஷ்பேக்
மும்பை பள்ளி மாணவரான பிரணவ், 2016-ம் ஆண்டு, 10-ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிகள் கிரிக்கெட்டில் 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து உலகையே பிரமிக்க வைத்தவர். அந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து நொறுக்கியிருந்தார். தோனி தான் இவரது ரோல் மாடல். இவரது தந்தை ஒரு ஆட்டோ டிரைவர்.

பவுலிங்கில் தீவிர கவனம்
கிட்டத்தட்ட அதே வயதுடைய, மகாராஷ்ட்ரா மைந்தனான அர்ஜுன் டெண்டுல்கர் அப்போதிலிருந்தே பிரணவ்வுடன் கம்பேர் செய்யப்பட ஆரம்பித்தார். ஆனால், 2016ல் அந்த மெகா இன்னிங்ஸுக்கு பிறகு பிரணவ் பெயர் எங்கேயுமே அடிபடவில்லை. அதேசமயம், அர்ஜுன் டெண்டுல்கர் சீராக வளர்ந்து வருவது கண்கூடாக தெரிந்தது. அவரும் தனது பவுலிங்கில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.

ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை?
தற்போது ஐபிஎல் தொடரில் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைத்த பிறகு, அனைவரும் மறுபடியும் பிரணவ்வை தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால், உண்மை என்னவெனில், 2016 இன்னிங்ஸுக்கு பிறகு, சொல்லிக் கொள்ளும்படி பிரணவ் எந்த பெரிய இன்னிங்ஸும் ஆடவில்லை. அவரால் மீண்டும் ஒரு சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த முடியவில்லை.

உதவித்தொகை வேண்டாம்
உலக சாதனை இன்னிங்ஸுக்கு பிறகு ஏற்பட்ட அவர் மீதான எதிர்பார்ப்பின் சுமையை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அந்த இன்னிங்ஸுக்கு பிறகு, மும்பை கிரிக்கெட் சங்கம் அவருக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை ஐந்து ஆண்டுகளுக்கு தருவதாக அறிவித்தது. ஆனால், மகனின் பெர்பாமன்ஸ் சரியாக இல்லாததால், அவரது தந்தை பிரஷாந்த் உதவித் தொகை வேண்டாம் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு 2017ம் ஆண்டே கடிதம் அனுப்பிவிட்டார்.

கிரிக்கெட்டை விட்டே விலகலா?
இப்போது பிரணவ் கிரிக்கெட்டை விட்டே விலகிவிட்டார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்த உறுதியான தகவல் ஏதும் இல்லை. அதேசமயம், அவர் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவர் அனைத்து தடைகளையும் தகர்த்து மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications