இந்தியா vs பாகிஸ்தான்.. முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி? அகமதாபாத் பிட்சில் யாருக்கு வாய்ப்பு?
அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரில் யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை அகமதாபாத் மண்ணில் நடக்கவுள்ளது. அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். இதே மைதானத்தில் ஐபிஎல் தொடரின் போது முகமது ஷமியின் சீம் மற்றும் ஸ்விங்கில் சிக்கி ஏராளமான அணிகள் மண்ணை கவ்வியுள்ளன.

அதேபோல் இரண்டாவது பந்துவீசும் அணிக்கும் முதல் சில ஓவர்கள் தரமான ஸ்விங் கிடைக்கும். அதனை பயன்படுத்தி குஜராத அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே பவர் பிளே ஓவர்களை வீசி சில விக்கெட்டுகளை கைப்பற்றுவார். 140 கிமீ வேகத்தில் ஸ்விங் செய்ய முடிந்தால், அந்த பந்துவீச்சாளரால் நிச்சயம் அகமதாபாத் பிட்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் மட்டும் முகமது ஷமி அகமதாபாத் மைதானத்தில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அகமதாபாத் மைதானம் புதிதாக கட்டப்பட்ட பின் இதுவரை இந்திய அணி ஆடியுள்ள போட்டியில் 2 ஸ்பின்னர்களுடன் தான் களமிறங்கியுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களில் தான் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் பும்ரா முதன்மை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் அவர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
அதேபோல் நம்பர் 8ல் ஷர்துல் தாக்கூர் அவசியமான வீரர் என்பதோடு, மிடில் ஓவர்களில் விக்கெட் டேக்கராகவும் உள்ளார். இதனால் முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி ஆடிய 2 உலகக்கோப்பை போட்டியில் சிராஜின் பந்துவீச்சு பெரிதாக இடம்பெறவில்லை. டெல்லி மைதானத்தில் நடந்த போட்டியில் பும்ராவின் லென் மற்றும் லெந்த் பின்பற்றாமல் சிராஜ் பந்துவீசியதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மறுபக்கம் அகமதாபாத் மைதானம் பற்றி முழுமையாக அறிந்துள்ள முகமது ஷமி வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளாக அகமதாபாத் மைதானத்தில அதிகமாக பந்துவீசியதும் ஷமி தான். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி உடனடியாக எந்த வீரரையும் அவ்வளவு எளிதாக மாற்ற மாட்டார்கள் என்றாலும், நாளைய ஆட்டத்தில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications