
டாப் 8 இடங்கள்
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 2018ம் ஆண்டு தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் வங்கதேசம், இலங்கை அணிகள் தரவரிசையில் 9 மற்றும் 10-ம் இடத்தில் இருந்ததால், தகுதிச்சுற்று மூலம் விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு வர உள்ளன. நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 நாடுகளும் தகுதிச்சுற்றில் மோதவுள்ளன.

ரசிகர்கள் விவாதம்
இந்த தகுதிச்சுற்று போட்டிகள் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. மேல் குறிப்பிடப்பட்ட 8 அணிகளும் குரூப் 1 மற்றும் க்ரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. போட்டிகள் ஒருபக்கம் இருந்தாலும், இந்திய அணிக்கு யார் கேப்டன் என்பதில் தான் ரசிகர்களுக்கு இடையே விவாதம் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி, இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி, ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியின் மோசமான செயல்பாடுகள், விராட் கோலி கேப்டன்ஷிப் மீது அவ்வப்போது சில விமர்சனங்கள் எழுவது வழக்கம். அதற்கு தீனி போடும் வகையில் அமைந்தது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.

ரோஹித் vs கோலி
இதில் ஏற்பட்ட தோல்வி, விராட் கோலி மீதான கேப்டன்ஷிப் கேள்விகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ரோஹித்துக்கு பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் யார்? என்றால், 5ம் வகுப்பு படிக்கும் பிள்ளையும் சொல்லும் ரோஹித் ஷர்மா என்று. டி20 எனும் குறுகிய ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஆல்ரெடி Proved என்பதால், கோலியைத் தாண்டி ரசிகர்களின் ஆதரவு ரோஹித்துக்கே உள்ளது.

முதன்மை விமர்சனம்
எனினும், கோலியின் கேப்டன்ஷிப்பை சந்தேகப்படுவதற்கு இல்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றாலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை மீறி, இறுதிப் போட்டி வரை அணியை கொண்டு வந்தது கோலி தான். அதுமட்டுமல்ல.. 2019ல் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வென்று முதன் முதலாக டெஸ்ட் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்தார். ஆனால், கடந்த 2014ம் ஆண்டு முதல்.. குறிப்பாக கோலி கேப்டனானதில் இருந்து இப்போது வரை, இந்திய அணி எந்தவொரு ஐசிசி டைட்டிலையும் கைப்பற்றவில்லை. இதுதான் அவர் மீது வைக்கப்படும் முதன்மை விமர்சனம்.

ஒருமுறை கூட
2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் தோல்வி, 2019ல் உலகக் கோப்பை தொடர் தோல்வி, 2021ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி என்று மிகப்பெரிய தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவிக்கிறது. இந்த இடத்தை தான் ரசிகர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்கின்றனர். விராட் கோலி ஓய்வு எடுத்த நேரத்தில், ரோஹித் தலைமையில், இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றதையும், 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஐபிஎல்-லிலும் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

நீடிக்கும் குழப்பம்
இந்த நிலையில், இந்தியாவின் கேப்டனான விராட் கோலியை விடுத்து, டி20 போட்டிகளுக்கு ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வலுக்கும் கோரிக்கையை பிசிசிஐ விரும்பவில்லை என்றே தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் 75 சாதனைகளை குவித்து வைத்திருக்கும் விராட் கோலியின் கேப்டன் பதவியில் கை வைத்தால், அது தேன் கூட்டில் கையை வைப்பதற்கு சமம் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதேசமயம், இந்திய அணியின் வெற்றியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால், உலகக் கோப்பை டி20 தொடருக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்று பெரும் குழப்பத்தில் பிசிசிஐ உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications