அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு..? பண்டா? கார்த்திக்கா? அக்சர் பட்டேல் இருப்பாரா..ரோகித் பதில் என்ன?
அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து ரோகித் சர்மா பேசினார்.
இந்திய அணியில் உள்ள குறைகள், விக்கெட் கீப்பர் யார் மற்றும் தமது காயம் குறித்தும் ரோகித் சர்மா விரிவாக பேசினார்.
இங்கிலாந்து அணியை அபாயகரமான அணி என்று குறிப்பிட்ட ரோகித், யுத்திகளை சரியாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேலுககு பதிலாக சாஹலை சேர்க்க வேண்டும் என்று பலரும் கூறிய நிலையில், அது குறித்து ரோகித் தனது மவுனத்தை கலைத்துள்ளார். அக்சர் பட்டேல் விக்கெட் எடுக்காதது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர் தனது நான்கு ஓவரை முழுசாக வீசவில்லை. ஏனென்றால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் பகிர்ந்து வழங்கி வருகிறோம். அதனால் அவரால் முழு ஓவரையும் வீச முடிவதில்லை. அக்சர்பட்டேலின் பலமே பவர் பிளவில் பந்து வீசுவது தான்.

உடல் தகுதி
ஆனால் அதற்கும் நாங்கள் இங்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் அவர் சிறப்பாக செயல்பட்டார் என்று ரோகித் கூறினார். பயிற்சியின் போது காயம் அடைந்தது குறித்து பேசிய ரோகித், என்னுடைய உடல் தகுதி நன்றாகவே இருக்கிறது. நேற்று பயிற்சி செய்யும் போது சாதாரண காயமாக தான் அது இருந்தது என்று பதில் அளித்தார்.

யாருக்கு வாய்ப்பு
அரையிறுதியில் பண்ட்க்கு வாய்ப்பா இல்லை கார்த்திக்கிற்கு வாய்ப்பா என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித், பண்டை பொறுத்தவரை நடப்பு உலக கோப்பையில் எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பதால் தான் ஜிம்பாப்வேக்கு எதிராக வாய்ப்பு கொடுத்தோம். அவரைப் போன்ற திறமையான ஒரு வீரரை அழைத்து வந்து ஒரு போட்டியை கூட கொடுக்கவில்லை என்றால் அது நன்றாக இருக்காது.

பரிசீலினை
நாங்கள் அனைத்து வீரர்களையும் தயார் நிலையில் இருக்கும்படி சொல்லிவிட்டோம். வாய்ப்பு வரும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் , பண்ட் பெயரை நாங்கள் சேர்க்க பரிசீலனை செய்வோம். ஆனால் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்று இப்போது நான் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

அபாயகரமான அணி
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மிகவும் அபாயகரமான அணி. அவர்கள் எந்த அணியும் வீழ்த்தக்கூடிய திறமை உள்ளவர்கள். நாளை இவர்களை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்ற எண்ணத்தில் நாங்கள் போய் விளையாட முடியாது. ஒவ்வொரு போட்டியும் புது தொடக்கமாகவும் கடந்த காலத்தில் நடந்தது குறித்து யோசிக்க தேவையில்லை என்று ரோகித் சர்மா கூறினார்.


Click it and Unblock the Notifications